சென்னை: அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 8 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் அறிவிப்புகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் இருவருக்கும் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில், பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இபிஎஸ், அந்த பதவியைச் தட்டிச்சென்றார். இருவருக்கும் இடையே எழுந்துள்ள போட்டி காரணமாக அதிமுக விரைவில் மீண்டும் சிதறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இந்த பரபரப்பான சூழலில்,  அதிமுக தலைமையகத்தில் 8 மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த  மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுடன் அதில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 18 தொகுதிகளில் ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றிபெறாதது ஏன் என்பது குறித்து கேட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிமுக அரசு மீதான விமர்சனங்களுக்கு எவ்வாறு பதிலளிக்கவேண்டும் என்பது குறித்தும் பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ் நடத்தும் இந்த ஆலோசனையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.