சென்னை: தமிழக அரசியலில் திமுக, அதிமுக மட்டுமின்றி, மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்ட தேமுதிக, கடைசியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திடம் தஞ்சமடைந்துள்ளது.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா,  ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடியிடம் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலமின்றி நடைபிணமாக காட்சி தரும்  நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் தன்வசப்படுத்திய பிரேமலதா, கட்சியின் பொருளாளளராகவும், அவரது தம்பி எல்.கே.சுதீஷ், கட்சியின் துணைச்செயலாளராகவும் அமர்ந்துகொண்டு, கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி வரும், தேமுதிகவுக்கு தமிழக அரசியல் களத்தில், அச்சாரமிட வைத்தது ஜெயலலிதா. பின்னர், அவருக்கு எதிராக வெகுண்டெழுந்த விஜயகாந்த், அதன்பிறகு எந்தவொரு தேர்தலிலும் சோபிக்க முடியாத நிலைக்கு ஆளானார். அவரது வாக்கு வங்கியும் குறைந்து வந்தது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, கூட்டணி என்ற பெயரில், அதிமுகவிடம் ஒரு தரப்பினரையும், திமுகவிடம் மற்றொரு தரப்பினரையும் அனுப்பி தொகுதி பேரம் உடன் பண பேரமும் பேசப்பட்டது அம்பலமானது. இதையடுத்து, தனித்து போட்டியிட்ட தேமுதிக படுதோல்வியை சந்தித்தது.  ஆனால், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அதுபோல தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், அதிமுக கூட்டணியில் தொடர வேண்டுமானால் தங்களுக்கு 41 சீட் வேண்டும் இல்லையென்றால், 3வது அணி அமைப்போம்  என சில மாதங்களுக்கு முன்பே விஜயகாந்த் மனைவி பிரேமலதா அதிமுகவுக்கு மிரட்டல் விடுத்தார்.  அதுமட்டுமின்றி, சசிகலா விடுதலையாகி சென்னை வரும்போது, அவரது வருகையை வரவேற்றதுடன், தனது தூதுவர்களை அனுப்பி அரசியல் பேரம் நடத்தியதாகவும் கூறப்பட்டது.

இதனால், தேமுதிக  சசிகலா தலைமையிலான அமமுக கட்சியுடன் கூட்டணி சேரும் என்று அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், சசிகலா திடீரென அரசியலை விட்டு ஒதுக்குவதாக அறிவிட்டதால், என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு கட்சியான கூட்டணிக்கு அலைந்தது. ஆனால், எங்கும் அவர் கேட்ட தொகுதியும், பணமும் ஒதுக்க கட்சி தலைமைகள் முன்வராத நிலையில், கடைசியில் கமல்கட்சியிடம் மண்டியிட்டது. அங்கும் அவர் எதிர்பார்த்த மரியாதை தரப்படாததால், வேறுவழியின்றி, அமமுகவிடம் சரணாகதி அடைந்துள்ளது. இதையடுத்து, தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் அகங்காரத்தினால்,  விஜயகாந்தை போல, தேமுதிகவும் முடங்கிப்போய்விட்டதாக அவரது கட்சியினரே வசைபாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா,  ‘பக்குவமில்லாத அரசியலைத் தேமுதிக செய்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில்ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றவர்,   விஜயகாந்த் வந்தால்தான் பிரச்சாரம் செல்வேன் என்று கூறியிவர் ஜெயலலிதா என்றும், ஆனால் அந்தப் பக்குவம் எடப்பாடியாரிடம் இல்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் பாஜக, பாமக ஆகிய கட்சிகளை அழைத்துப் பேசிவிட்டுக், கடைசியாகத்தான் எங்களை அழைத்தனர். எத்தனையோ முறை சொல்லியும் எங்களின் வார்த்தைகளை அவர்கள் செவிமடுக்கவே இல்லை.  உண்மையில் இந்தக் கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்குப் பக்குவம் இல்லை.

ஆனால், தேமுதிமுக மீது பழி சுமத்துகிறார்கள். 13 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என கூறினார்கள். எந்த தொகுதிகள் என்று அடையாளம் காட்டவும் மறுத்தார்கள். இறுதியாக 18 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கேட்டோம். பின்னர் நீங்கள் விரும்பும் முடிவை எடுத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வர் கூறியதால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என விளக்கமளித்துள்ளார்.

பிரேமலதா தனது தம்பி எல்.கே.சுதீஷ்க்கு  ராஜ்யசபா எம்.பி. பதவி கேட்டு தொல்லைப்படுத்தியதும், தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் கேட்டு கட்சிகளிடம் தொல்லைப்படுத்தியதுமே கூட்டணியில் இருந்து வெளியேற காரணம் என்று அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.