சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி, கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணி மட்டுமின்றி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும், அமமுக கட்சி தலைமையில் மேலும் ஒரு கூட்டணியும் இடம்பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.

டிடிவியின்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியில் தேமுதிக, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் ஒருசில சிறிய கட்சிகள் இணைந்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. அதுபோல கூட்டணி கட்சியான ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஓவைசி கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி,

வாணியம்பாடி – வக்கீல் அஹமத்,

சங்கராபுரம் – முஜிபுர் ரஹ்மான்,

கிருஷ்ணகிரி – அமீனுல்லா

ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக  சட்டப்பேரவையில் அமமுக கூட்டணி வாயிலாக  ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி முதல்முறையாக  தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.