தேனியில் எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர்கள்..

’’எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்-அமைச்சராக வர வேண்டும்’’ என நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இப்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின்  சொந்த மாவட்டமான தேனியில் அதே அமைப்பு சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

‘’முதல் –அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமியே பொருத்தமானவர்’’ என அந்த போஸ்டர்களில் வாசகங்கள் காணப்படுகின்றன.

எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி புகைப்படமும் இந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

தேனி பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர்.

தேனி மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் தான் அடுத்த முதல்-அமைச்சர் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியும்,ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து’’ முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அ.தி.மு.க.வினர் பொது வெளியில் விவாதிக்கக் கூடாது’ கூட்டறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி