ஜெய்ப்பூர்: பண மோசடி புகார் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் உள்பட நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமான  9 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டுநடத்தியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள 200 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவும், டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,  காங்கிரஸ், பாஜக உள்பட மாநில கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக  தீவிர  பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பணமோசடி தொடர்பாக  ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் உள்பட அவருக்கு நெருங்கி வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ராஜஸ்தான் முதல்வரின் மகன் மற்றும் சகோதரர் முதல் உதவியாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

ராஜஸ்தான்  மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா மீது பணமோசடி தொடர்பாக ஜெய்ப்பூர் மற்றும் சிகாரில் அவரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல், காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஓம் பிரகாஷ் ஹட்லாவுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆசிரியர் போட்டித் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பணப்பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் டெல்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.