கெய்ரோ:

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். உலக அளவில் எதிர்ப்பை கிளப்பியுள்ள டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பாலஸ்தீனம் -இஸ்ரேல் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டு மொத்த அரபு நாடுகளும் டிரம்ப் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன. தனது முடிவை டிரம்ப் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐரோப்பிய நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன. இது குறித்து ஆலோசிக்க எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு நாடுகள் கூட்டமைப்பின் அவசர கூட்டம் நடந்தது.

இதில் லெபனான் வெளியுறவு துறை அமைச்சர் ஜெப்ரான் பாஸ்சில், “ஜெருசலேம் விஷயத்தில் அமெரிக்காவின் முடிவு குறித்து நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். அமெரிக்காவுக்கு தூதரக ரீதியிலான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். அரசியல் ரீதியான விவாதத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். அமெரிக்காவுக்கு எதிராக நிதி மற்றும் பொருளாதார தடை கொண்டு வர பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

இதற்கிடையே, எகிப்து கோப்டிக் கிறிஸ்தவ தலைவர் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உடனான சந்திப்பை திடீரென ரத்து செய்துள்ளார்.