டெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா பதவிகளுக்கு ஜூன் 10ந்தேதி தேர்தல் நடைபெறும் என அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும்  57 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த 6 எம்.பிக்களின் பதவிக்காலம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 57 எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில்,   திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி சோமு; அதிமுகவின் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார் என 6 எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இவர்களுக்கான வழியனுப்பு விழாவும் ஏற்கனவே நடைபெற்று முடிவடைந் தது. இந்தநிலையில், காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஒருவர் ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட 36 எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். தற்போதைய தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் நிலவரப்படி, தி.மு.க சார்பில் 4 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க சார்பில் இரண்டு எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளை பிடிக்க அரசியல் கட்சிகளின் பிரமுகர்களிடையே  கடுமையான போட்டி நிலவி வருகிறது.