டெல்லி: வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய கொரோனா பாதுகாப்பு  நெறிமுறைகள் என்னென்ன… என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், வாக்கு எண்ணிக்கையின்போது, கொரோனா கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் கடுமையாக்கி உள்ளது.
ஏற்கனவே, வாக்கு எண்ணிக்கையின்போது, அரசியல் கட்சியினர் தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் அதிகாரிகள், முகவர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை உள்பட மாவட்டங்களில்  உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது  வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி,
வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வருவது அவசியம்
 கோவிட்  நெகடிவ் அறிக்கை அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வேட்பாளர்கள் எதிர்மறையான ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கை அல்லது விரைவான ஆன்டிஜென் சோதனை அறிக்கை அல்லது எண்ணும் தொடக்கத்திற்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்கள் காண்பிக்க வேண்டும், 
வாக்கு எண்ணும் நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வேட்பாளர்கள் எண்ணும் முகவர்களின் பட்டியலை வழங்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வேட்பாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் 
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பொதுமக்கள், தொண்டர்கள் கூடக்கூடாது
முகக்கவசம், கிருமி நாசினி,கையுறை, பேஷ்ஷீல்டு கட்டாயம்
உள்பட பல்வேறு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.