முழு ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி: இன்றும், நாளையும் 24மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு…

Must read

சென்னை: தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் 15 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால்,  இன்றும்  நாளையும்  கூடுதலாக சிறப்பு பேருந்துகள்   இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை  அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும்  2 வாரங்களுக்கு  கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு  அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மே 10 முதல் 24 வரை 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  ஏற்கவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தளர்த்தியுள்ள தமிழகஅரசு இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கி உள்ளது.

இந்த 15 நாட்கள் பொதுமுடக்க காலமான  மே 10 முதல் 24 வரை மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சி உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு தடை போட்டுள்ளது.

ஏற்கனவே குறைந்த அளவிலான பேருந்துகள் இயங்கி வந்த நிலையில், பொதுமுடக்கம் காரணமாக மக்கள் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில், இன்றும்  நாளையும்  24 மணி நேரமும்கூடுதலாக சிறப்பு பேருந்துகள்   இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக  என தமிழக போக்குவரத்துத்துறை  அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களும், ஊழியர்களும் தங்களின் சொந்த ஊர்களுக்கு எவ்வித நெருக்கடியும் இன்றி செல்வதற்காக நாளை வரை (மே 9) 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மே 10ம் தேதியிலிருந்து ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்றும் நாளையும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும். அதேபோல் இன்று இரவிலும் பேருந்துகள் ஓடும். மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்கம். இதற்காகப் பேருந்து நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article