ஐதராபாத்: 2019 மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் சிறப்பாக நடத்தியது என்றும், ஆனால், சிலவகை புகார்கள் குறித்து காலத்தே முடிவெடுத்திருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மேலும், தேர்தல் ஆணையர்களின் ஒருவரான அசோக் லாவாசாவின் அதிருப்தி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலை இவர் தலைமையேற்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் கூறியதாவது, “ஒப்பீட்டளவில் தேர்தல் கமிஷன் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் கமிஷன் மீது புகார் கூறுவதொன்றும் புதிதல்ல. புகார்களின் மீதான நடவடிக்கை ஏதேனும் ஒரு வழியில்தான் எடுக்கப்பட முடியும்.

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான சில புகார்களுக்கு, காலத்தே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் தேர்தல் கமிஷன். மேலும், அதேசமயம் உத்தரவுகள் பிறப்பிக்கும்போதே அதற்கான விளக்கங்களையும் அளித்திருக்க வேண்டும்.

தேர்தல் கமிஷனர் அசோக் லாவாசாவின் அதிருப்தி எந்த காரணத்திற்காக பதிவுசெய்யப்படாமல் விடப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை” என்றுள்ளார்.