டில்லி

இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தற்போதைய மக்களவையின் ஆயுட்காலம் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதை ஒட்டி இந்த வருடம் நடைபெற உள்ள மக்கள் தேர்தல் குறித்த அறிவிப்பு இது வரை வெளியாகாமல் உள்ளது. இதற்கு முந்தைய மக்களவை தேர்தல் அறிவிப்புக்கள் மார்ச் 5 ஆம் தேதிக்குள் தெரிவிகப்பட்டுள்ளது.

இந்த வருடம் மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்திருந்தது.   ஆனால் அந்த தேதியில் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. அத்துடன் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒரிசா, சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.,

காஷ்மீர் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டு வரும் ஜூன் மாதம் ஆறு மாதங்கள் முடிவடைவதால் அம்மாநில சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலுடன் நடக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் குறித்த அறிவிப்பு மற்றும் தேர்தல் அட்டவணை வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்துக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளிவந்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.