டில்லி

தேசிய வாத காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசியக் கட்சி அந்தஸ்தை இழக்க உள்ளன

தேர்தல் சின்ன விதிகள் 1968 இன் படி மக்களவை தேர்தலில் ஒரு கட்சி நான்கு அல்லது ஆறு மாநிலங்களில் போட்டியிட்டு ஆறு சதவிகித வாக்குகளை பெற்றால் அக்கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து அளிக்கப்படும். அத்துடன் அந்த கட்சி ஒரு மாநிலத்தில் குறைந்தது 4 மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அந்த கட்சி மூன்று மாநிலங்களில் 2% இடங்களை அதாவது 11 தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும்.

கடந்த 2 மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகள் அந்தஸ்தைப் பெற்றுள்ள தேசியவாத  காங்கிரஸ், திருணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மிகவும் குறைந்த அளவில் வெற்றி பெற்றுள்ளன.   தேசிய வாத காங்கிரஸ் கட்சி தற்போது மேகாலயா, மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது.

திருணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வென்றுள்ள போதிலும் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தோல்வியைத் தழுவி உள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போது கேரளா, தமிழகம், மற்றும் மணிப்பூரில் வெற்றி பெற்றுள்ள போதிலும் நான்கு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும் என்னும் இலக்கை அடையவில்லை.

இதையொட்டி தேர்தல் ஆணையம் இந்த மூன்று கட்சிகளுக்கும் நோட்டிஸ் அனுப்பி  உள்ளது.   அந்த நோட்டிசில் இந்த கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தேசியக் கட்சி அந்தஸ்தை ஏன் விலக்கிக் கொள்ளக் கூடாது என வினா எழுப்பி உள்ளது.   இதற்கான பதில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.