டில்லி
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நற்சான்று அளித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலின் பிரசாரங்களில் பாஜக தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் தனது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மூலம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். மேலும் இது குறித்து ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார்களுக்கு ஆணையம் முடிவு தெரிவிக்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மோடி மீது தேர்தல் பிரசாரத்தின் போது நடத்தை விதிகளை மீறி பார்மர், வாரணாசி, நாந்தேத், லதூர் மற்றும் வார்தாவில் பேசியதாக புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தன. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மீது நாக்பூர் மற்றும் கிருஷ்ணா நகர் பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி பேசியதாக புகார்கள் இருந்தன
இதை ஒட்டி உச்சநீதிமன்றம் இது குறித்து நேற்றைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் நேற்று அளித்த பதிலில் இந்த அனைத்து புகார்களிலும் இருவருக்கும் நற்சான்று அளித்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று நடந்த வழக்கு விசாரணையில், “கடந்த இரு நாட்களில் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நற்சான்று அளித்து தேர்தல் ஆணையம் 6 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் அதில் 5 உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அவருடைய எதிர்புக்கான காரணம் கேட்டதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. அமித்ஷா குறித்த கேள்விகளுக்கும் விளக்கம் இல்லை. எனவே தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய அனுமதிக் வேண்டும்” என காங்கிரஸ் வாதிட்டது.
காங்கிரசின் வாதத்துக்கு பிறகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, “வழக்கை தொடுத்த காங்கிரஸ் எம்.பி. தரப்பில் தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவு நகல்களை கூடுதல் பிரமாணப்பத்திரமாகத் தாக்கல் செய்யலாம். வரும் 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் ” எனத் தெரிவித்தனர்