வீட்டில் இருந்தே செல்ஃபோன் எண்ணை ஆதாருடன் இணைக்க எளிய வழி

வீட்டில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? வழி இருக்கிறது வாருங்கள்.

அனைத்து தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களும், தங்களது செல்போன் எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம். இதற்கு 2018, பிப்ரவரி 6ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒருவர் எத்தனை செல்போன் எண்கள் வைத்திருந்தாலும், அந்தந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குச் சென்று தங்களது ஆதாரை இணைக்க வேண்டியது அவசியமாகிறது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் அதிக வேலைதான்.

இதனை எளிதாக்க புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது கணினி மூலமாகவே செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் புதிய திட்டத்தை டிசம்பர் 1ம் தேதி முதல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

முதல் வழி: வாடிக்கையாளர்கள், தங்களது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவது வழி: தொலைத் தொடர்பு நிறுவனத்தின் குரல் பதிவு ஐவிஆர் உதவி மையம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

இணையதளம் வாயிலாக செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி.

முதல் படி..
ஏர்செல், ஏர்டெல் போன்ற செல்போன் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இணையதளத்துக்குச் சென்று, உங்களது செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.

இரண்டாவது படி..
உங்களது தொலைத்தொடர்பு நிறுவனம் (telecom service provider TSP) அந்த செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வோர்டை அனுப்பும். அந்த ஓடிபியை நீங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

3வது படி..
அப்போது உங்களது ஆதார் எண்ணுக்கான தகவல்களைக் கேட்கும். அதனை சரியாக பதிவு செய்ய வேண்டும்.

4வது படி..
அப்போது அந்த ஆதார் எண் குறித்தத் தகவல்களைக் கேட்டு செல்போன் நிறுவனம் உதை (UIDAI)நிறுவனத்துக்கு செய்தி அனுப்பும்.

5வது படி..
உங்கள் ஆதார் எண்ணுடன் எந்த செல்போன் எண்ணை இணைத்திருக்கிறீர்களோ, அந்த எண்ணுக்கு UIDAI-யிடம் இருந்து ஒரு ஓடிபி வரும்.

6வது படி..
அதே சமயம், இணையதளத்தில், ஆதார் எண்ணுக்காக நீங்கள் அளித்த தகவல்களும் வரும். அவை சரியாக இருப்பின், உங்கள் செல்போனுக்கு வந்த ஓடிபியை பதிவு செய்ய வேண்டும். முன்னதாக விதிமுறைகளுக்கு ஒப்புக் கொள்வதாக பதிவு செய்வது அவசியம்.

7வது படி..
இவை அனைத்தும் முடிந்த பிறகு, வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுடன் இணைக்கப்படும் ஆதார் எண் பற்றிய தகவல்கள் தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு உறுதி செய்யப்படும்.

இதே விஷயங்களை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் குரல் பதிவு எனப்படும் வாய்ஸ் – பேஸ்டு ஐவிஆர் ஹெல்லைன் மூலமாகவும் செய்து கொள்ளலாம்.

 
English Summary
Easy way to link aadhar with mobile