திண்டுக்கல்

ன்று 2 ஆம் நாளாகத் திண்டுக்கல், புதுக்கோட்டையில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.

நேற்று அமலாக்கத்துறையினர் தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடையவர்களின் இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. பாதுகாப்புக்காகத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் உள்ள நிலையில் சோதனை நடக்கிறது.

இந்த சோதனை நடைபெற்றுவரும் நிலையில், தொழிலதிபர் ரத்தினம் எங்கிருக்கிறார் என்ற விவரம் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளன. சோதனையைத் தொழிலதிபர் ரத்தினம் நடத்தி வரும் நிறுவனங்கள், செங்கல் சூளை, பெட்ரோல் பங்குகளில் விரிவுபடுத்தப்படலாம் என அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணிக்கு  புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடங்கி விடிய, விடிய அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் 8 இடங்களில் சோதனை நடந்த நிலையில், கந்தர்வகோட்டை அறியானிப்பட்டி, புதுக்கோட்டைத் தனியார் ஆர்க்கிடெக் நிறுவனத்தில் நடந்த சோதனை மட்டும் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள 6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.