டெல்லி: நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சியை காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ளன. பிரதமர் மோடி அரசு அரசியலைப்பு அமைப்பு சட்டத்தை அவமரியாதை செய்து வருவதாக குற்றம் சாட்டி  புறக்கணித்துள்ளன. இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, வாரிசு அரசியல் குறித்து விமர்சித்துள்ளார்.

அண்ணல் அம்பேதகர் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம்,  1949ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்றைய நாள் அரசியலமைப்புச் சட்ட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.  அதனை பறைசாற்றும் வகையிலும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி நாட்டு மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டு தோறும் நவம்பர் 26ம் தேதி தேசிய அரசியல் அமைப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழா இன்று கொண்டாட்டம்   இன்று காலை 11மணிக்கு விழா தொடங்கியது. இந்த விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விழாவை தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுதிமொழியை வாசித்தார். அதை பிரதமர் மோடி உள்பட அனைவரும் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி எடுத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது நாட்டின் அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டதாக தெரிவித்தவர்,  நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின்  தொகுப்பு மட்டுமல்ல பெரும் பாரம்பரியம். எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு வழங்குவதற்காக இந்தியாவின் பல தலைவர்கள் மூளைச்சலவை செய்த இந்த மாளிகைக்கு வணக்கம் செலுத்தும் நாள் அரசியலமைப்பு தினம். மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் போது போராடிய அனைவருக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.

1950க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிலர் அவ்வாறு செய்யவில்லை. நாம் செய்வது சரியா இல்லையா என்பதை மதிப்பிடவும் இந்த நாள் கொண்டாடப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின்’ போது, நமது உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில், கடமைப் பாதையில் நாம் முன்னேறுவது அவசியம் என்றார்.

மேலும், இன்றைய தினமானது,  எதிரிகள் இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்திய துக்க தினம் என மும்பை தொடர் வெடிகுண்டு நிகழ்வை நினைவுபடுத்தியதால்,  26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  நாட்டில் பல கட்சிகள் குடும்ப அரசியல் செய்கின்றன. குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தவர்,குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என வலியுறுத்தினார்.

நம்மை நாமே ஆளவேண்டும் என்பதற்காக மகாத்மா காந்தி போராடினார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில், நமது உரிமைகளை பாதுகாக்க கடமை என்கிற பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம் என்றவர், அதன்மூலமே நமது அரசியலமைப்புச் சட்டம்  உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும், அந்த அரசியலமைப்பு சட்டங்களை அரசியல் கட்சிகள் புரிந்துகொண்டு பு செயல்பட வேணடும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ஊழலுக்காக தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறியதுடன், ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மோடி தலைமையிலான மத்தியஅரசு, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் இன்று நடக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதை ஏற்று திமுக, சிவசேனா, ஆர்எஸ்பி, என்சிபி, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜேஎம்எம், ஐயுஎம்எல் ஆகிய கட்சி உள்பட 14 கட்சிகள் புறக்கணித்தாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.