மேற்கு இந்திய தீவு வீரரான 38வயது டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் வீரர் டுவெய்ன் பிராவோ தற்போது உலக கோப்பை டி20 தொடரில் ஆடி வருகிறார். நேற்று இலங்கை அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி கடுமையாக ஆடியும், 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணி, தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில், 4 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும், ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்திற்கு பிறகு டி20 உலகக் கோப்பையில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பிரோவோ கூறி யுள்ளார்.
டுவைன் பிராவோ, கடந்த 2004ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வ தேச அரங்கில் அறிமுகமானார். அதே ஆண்டில், தனது முதல் டெஸ்டில் விளையாடினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டி20 போட்டிகளிலும் களமிறங்கினார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான பிராவோ, இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள், 90 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்த நிலையில் தனது ஒய்வு குறித்து பேசிய பிராவோ, “ஓய்வுபெற நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். எனது கிரிக்கெட் பயணம் அருமையாக இருந்தது. 18 வருடங்களாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாடி வருகிறேன். நிறைய ஏற்ற தாழ்வுகளை (வெற்றி, தோல்வி) சந்தித்திருக்கிறேன். கரீபியன் மக்களின் பிரதிநிதியாக இருந்தது பெருமைக்குரிய விஷயம்” என தெரிவித்ததுடன், “எனது காலகட்டத்தில் விளையாடியவர்கள், உலகஅரங்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கென்று பெரிய பெயரை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர். நானும் அதில் அங்கும் வகித்தவன் என்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. முடிந்த அளவுக்கு எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன். டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் ஓய்வுபெற்றுவிடுவேன்” எனக் கூறினார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 2012, 2016-ல் டி20 உலகக் கோப்பை வென்றபோது, பிராவோ XI அணியில் இருந்தார். சர்வதேச டி20 கிரிக்கெடில் இதுவரை 1245 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல் 40 டெஸ்ட்களில் 2200 ரன்களும், 164 ஒருநாள் போட்டிகளில் 2968 ரன்களும் எடுத்துள்ளார்.
அபுதாபியில் நாளை நடக்கும் ஆஸ்திரேலியா மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் போட்டியுடன் டுவைன் பிராவோ ஓய்வு பெறுகிறார்.
பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தாலும்கூட, மற்ற போட்டிகளிலும், ஐபில் போன்ற உரிமையாளர்களால் நடத்தப்படும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.