சென்னை:  கிரானைட் தொழிலுக்கு புத்துயிர் கொடுக்கப்படும் என்றும், கனிமவளக் கொள்ளை தடுக்கப்படும் என்றும்  கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கனிமவளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில்  ஆளில்லா விமானத் தொழில்நுட்பம், பறக்கும் படைகள், ஆகியவற்றின் மூலம் கனிமவளக் கொள்ளையை தடுக்க அரசு தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கனிம நிறுவனம் 1978-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுவப்பட்டது.  தமிழ்நாடு கனிம நிறுவனம் 2022-2023 ஆம் நிதியாண்டில் கிரானைட் மூலம் கிடைக்கும் வருவாயினை ரூபாய் 77 கோடியாகவும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூபாய் 105 கோடியாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருங்கனிமங்கள் மற்றும் கிரானைட் உள்ளிட்ட சிறு கனிம வளங்களை கண்டறிதல் மற்றும் அவற்றின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து சந்தையில் விற்பதை தமிழ்நாடு கனிம நிறுவனம் தனது முக்கிய குறிக்கோளாக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு கனிம நிறுவனம் கருப்பு, வண்ண கிரானைட் கற்கள், பெருங்கனிமங்களான சுண்ணாம்புக்கல், கிராஃபைட், போன்ற கனிமங்களை அறிவியல் முறையில் வெட்டியெடுத்து முறையாக விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாடு கனிம நிறுவனம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான கிரானைட் கற்பலகைகள், ஓடுகள், சுவர் பலகைகள், நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து தனக்கென ஓர் சந்தையை உருவாக்கியுள்ளது.

1978-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான கால அளவில் இந்தியாவிற்குள் கிரானைட் தொழிலில் 20 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி/ விற்பனை செய்யும் முதன்மை மாநிலமாக தமிழகம் இருந்தது.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற கிரானைட் உலகத்திலேயே மிகச் சிறந்த தரம் வாய்ந்த கிரானைட் கற்களாக கருதப்படுகிறது.

சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் உள்ள கடுமையான நிபந்தனைகளின் காரணாமாக 35 கிரானைட் குவாரிகள், 2013-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரை படிப்படியாக மூடப்பட்டதால், 2013-2014 ஆம் ஆண்டில், கிரானைட் மூலம் கிடைத்த தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூபாய் 113 கோடியிலிருந்து 2019-2020 ஆம் ஆண்டில் ரூபாய் 19 கோடியாக குறைந்தது.

தமிழ்நாடு கனிம நிறுவனம் 2021-2022 ஆம் ஆண்டில், சுமார் 4,700 கன மீட்டர் கிரானைட் கற்களை உற்பத்தி செய்து ரூபாய் 39 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

தமிழ்நாடு கனிம நிறுவனம் 2022-2023 ஆம் நிதியாண்டில் அதன் வருவாயினை ரூபாய் 77 கோடியாகவும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூபாய் 105 கோடியாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமவள கொள்கை விளக்குறிப்பு முழு விவரம்:

TNLA – Policy Note -27 – Inds Dept_Mines and Minerals – 2022-2023 – Tamil – Date – 19.04.2022