பாட்னா:

வெயிலின் உக்கிரம் காரணமாக வரும் 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்து உள்ளார்.

வரலாறு காணாத வெயில் காரணமாக பீகார் மாநிலத்தில்  70 பேர் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தென்மேற்கு பருவ மழை தொடங்கி கேரளா உள்பட சில மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

முக்கியமாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பீகார் தலைநகர் பாட்னாவில் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

கடுமையான வெப்பம் காரணமாக, அவுரங்கபாத், கயா, நாவாடா ஆகிய மாவட்டங்ளில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.