சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்துக்கு இன்று மதியம் 1.15மணி முதல் மாலை 6மணி வரை விமானம் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய ஏர்லைன்ஸ் விவகாரக் குழு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது. குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலம்  இன்று மாலை சென்னைக்கும் மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால், சென்னை மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாடு மற்றும் வெளிமாநில விமானங்கள் தரையிறங்க மதியம் 1.15மணி முதல் மாலை 6மணி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய ஏர்லைன்ஸ் விவகாரக் குழு அறிவித்து உள்ளது. அதே வேளையில் சென்னையில் இருந்து புறப்படும் விமான சேவைகள் திட்டமிட்டபடி தொடரும் என்றும் தெரிவித்து உள்ளன.

பயணிகளின் பாதுகாப்பு அம்சம் மற்றும் காற்றின் தீவிரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்து உள்ளது.