சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், , பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.  சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையை கடக்கும் எனவும், இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 170 கி.மீ. தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடை மழை நீடித்து வருகிறது. சென்னை முழுவதும்  மழைநீரால் சூழப்பட்டு, தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர் மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கின்றன. இதனால்,  செம்பரம்பாக்கம் ஏரிஅணையின் நீர் மட்டம் 20 புள்ளி 48 அடியாக உள்ளது.  ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து 4 ஆயிரத்து 20 கனஅடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து, 722 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து, வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதுபோல சென்னையின் மிக அருகாமையில் உள்ள புழல் ஏரிக்கும்  வினாடிக்கு 10 ஆயிரத்து, 690 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு  2 ஆயிரத்து, 853 மில்லியன் கனஅடியாக உள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்,  அணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளான,  நாரவாரிக்குப்பம், தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாத்துர், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மேலும், மற்றொரு நீர்த்தேக்கமான  பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து, 8 ஆயிரம் கனஅடியாக உள்ளதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியில் இருந்து, 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரான  கொசஸ்தலை ஆறு,  மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாலந்தூர், எறையூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

தாழ்வான பகுதியில் உள்ள  மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.