திருவனந்தபுரம்

கேரள அரசு அணை நிர்வாகத்தை மோசமாக செய்ததால் கடந்த வருடம் வெள்ளம் ஏற்பட்டதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வருடம் கேரளாவில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்தினால் கேரள மக்கள் கடும் துயரம் அடைந்தனர்.   இந்த வெள்ளத்தினால் மாநிலமே மூழ்கடிக்கப்பட்டது.   சுமார் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.   சுமார் 15 லட்சம் மக்கள் வீடு மற்றும் பொருட்களை இழந்தனர்.   பலருக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டது.

கேரள மாநில ஆர்வலர் ஈ ஸ்ரீதரன் உள்ளிட்ட சுமார் 25 பேர் இது குறித்து விசாரிக்குமாறு அரசை கேட்டுக் கொண்டனர்.   அரசு அதற்கு சரியாக பதில் அளிக்காததால் அவர்கள் நீதிமன்றத்தை நாடினர்.    கேரள உயர்நீதிமன்றம் ஜேகப் பி அலக்ஸ் தலைமையில் ஒரு நடுவர் ஆய்வுக் குழுவை அமைத்தது.  அந்த குழுவின் ஆய்வறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில், “நாடே வெள்ளத்தில் தவிக்கும் போது மக்களை மீட்க அரசு சரியான முறையில் செயல்படவில்லை.    ஏற்கனவே ரெட் அலர்ட் கொடுத்திருந்த போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.   மாநிலத்தில் உள்ள 79 அணைகளிலும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது அதிர்ச்சி ஊட்டும் விதத்தில் உள்ளது

அணை நிர்வாகத்தை அரசு சரிவர செய்யாததால் அணையில் ஏராளமான நீர் நிரம்பி உள்ளது.   அந்த நீர் திடீரென திறந்து விடப்பட்டதால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி பலர் மரணமடைந்துள்ளனர்.   அணை திறப்பதற்கு முன்பே அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அரசு அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டது.  ” என குறிப்பிடப்பட்டிரு ந்தது.

வெள்ள நேரத்தில் இடுக்கி அணை தாமதாக திறக்கப்பட்டதற்கு கேரள அமைச்சர் எம் எம் மணி அணையின் மதகுகளை எளிதாக திறக்க முடியாததால் தாமதமானதாக தெரிவித்தார்.   தற்போது இந்த அறிக்கை வெளியானதால் கேரள சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா அமைச்சர் மணி பதவி விலக  வேண்டும் எனவும் அவர் மீது கொலைக் குற்ற வழக்கு தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கோபம் கொண்டுள்ளார்.  மேலும் இதற்கு பதில் அளிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியானது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்னடவை உண்டாக்கி உள்ளது.