சென்னை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத்  தமிழகத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.   தமிழகத்தில் தினசரி பாதிப்பு 10000க்கும் மேலாக உள்ளது.   அரசு தடுப்பூசி போடும் பணிகளை அதிகரித்த போதிலும் அதையும் மீறி கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

இதையொட்டி இரவு நேர ஊரடங்கு மற்றும்  ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு ஆகியவை அமலாக்கப்பட்டுள்ளது.   இன்றுடன் பொது ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விவரம் வருமாறு:

*  பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்வோர் பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட      இருக்கைகளில் 75 சதவீதம் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி

* ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு

* பொது முடக்க காலத்தில் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்

  • 14 ஆம் தேதிமுதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை.
  • மிக அத்தியாவசிய பணிகள் தவிர வேறு காரணங்களுக்கு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு குறித்து. ‘தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்புக்கள் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம்,   இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும்  முதல் தவணை மட்டும் செலுத்திக் கொண்டோர் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டு கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.