டில்லி

கொரோனா அச்சம் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் திறந்தாலும் சுமார் 57% பேர் அங்குச் செல்லப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடும் இடங்களை அரசு மூடியது.  அவ்வகையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மார்ச் மாத இறுதி முதல் மூடப்பட்டது.  அதன்பிறகு நாடெங்கும் ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டது தொடர்ந்தது.  ஆயினும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தற்போது பல மாநில அரசுகள் நாளை முதல் வழிபாட்டுத் தலங்களை, உணவு விடுதிகள் போன்றவற்றைப் பல கட்டுப்பாடு விதிகளுடன் திறக்க உள்ளன.   அதே வேளையில் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இவை அனைத்தும் ஜூன் 30 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஒரு சமூக வலைத் தளத்தில் இது குறித்து கணக்கெடுப்பு ஒன்று நடந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பில் சுமார் 32000 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.   இவர்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டால் அங்குச் செல்வார்களா என்னும் கேள்விக்கு 8681 பேர் பதில் அளித்துள்ளனர்.  அவர்களில் 57% பேர் கொரோனா அச்சம் காரணமாகச் செல்லப்  போவதில்லை எனப்  பதில் அளித்துள்ளனர்.   இதில் 11% பேர் தற்போது நிச்சயமாகச் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

 இதைப் போல் உணவு விடுதிகளுக்குச் செல்வார்களா என்னும் கேள்விக்கு 8616 பேர் பதில் அளித்துள்ளனர். இவர்களில் 10% பேர் மட்டுமே செல்வோம் எனவும் 81% பேர் செல்ல மாட்டோம் எனவும் பதில் அளித்துள்ளனர்.  மீதமுள்ளோர் அப்போதைய நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஷாப்பிங் மால்கள் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த 8354 பேரில் 70% க்கும் மேற்பட்டோர் செல்லப் போவதில்லை எனப் பதில் அளித்துள்ளனர். இதில் 21% பேர் குறைந்தது ஒரு முறையாவது முயற்சி செய்ய உள்ள்தக தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 9% பேர் இது குறித்து முடிவு எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பை நடத்திய நிறுவன மேலாளர் அக்‌ஷய் குப்தா, “தற்போது மத்திய அரசு அறிவுறுத்தியபடி திரை அரங்குகள், விளையாட்டு இடங்கள் போன்றவற்றைத் திறக்க வேண்டாம் எனப் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்  பலரும் ஷாப்பிங் மால்கள் செல்ல தயக்கம் காட்டினாலும் அங்குள்ள பொருட்களை வீட்டு விநியோகம் செய்தால் வாக்கிக் கொள்வதன் மூலம் தொற்றைத் தவிர்க்க முடியும் எனச் சொல்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.