சென்னை

ரூ.2000 நோட்டுக்கள்புழக்கத்தடையால் வங்கி ஏ டி எம் களில் ரூ.2000 நோட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி திடீரென புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது எனப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இதனால் மக்களிடம் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு வங்கி வாயிலில் நெடுநேரம் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக காத்துக் கிடந்தனர்.

பலரும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். அரசின் இந்த நடவடிக்கையால் பண முதலைகள் குறுக்கு வழியில் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை அதிகாரிகள் உதவியுடன் காசாக்கிக் கொண்டனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள்தான் சிரமங்களை அனுபவித்தனரே தவிரக் கருப்புப் பணம் ஒழியவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்தன. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.500 நோட்டுக்கள் மட்டுமே புதிதாக அச்சிடப்பட்டன.  இந்த ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்து சுமார் 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கம் கடந்த 2 ஆண்டுகளாகவே ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டது. பல லட்சம் ரூபாயை வெளிப் பகுதிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதால் பலர் ரூ.2 ஆயிரம் நோட்டுக்களைப் பதுக்கத் தொடங்கினர். வருமான வரித் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை போன்ற சமயங்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் அதிகம் பிடிபட்டன.

இதையொட்டி நேற்று முன் தினம் ரூ.2000 நோட்டுக்களைப் புழக்கத்தில் இருந்து தடை செய்வதாக ரிசவ் வங்கி அறிவித்தது.  இதையொட்டி பலரும் ஏ டி எம்கள் மூலம் ரூ.2000 நோட்டுக்களை டெபாசிட் செய்து வருகின்றனர்.  இதனால் தற்போது ஏ டி எம்களில் ரூ.2000 நோட்டுக்கள் குவிந்து வருகின்றன.