புதுடெல்லி:
ரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் சிலர் கைதானார்கள். வழக்கு விசாரணை டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்றம் தினகரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை தற்போது கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் லஞ்ச வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.