சேலம்,

ற்கனவே திமுகவினர் தூர் வாரிய ஏரியை, அதிமுகவினர் மீண்டும் தூர் வார முயற்சி செய்ததால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதிக்குட்பட்ட  சேலம் கட்சராயன் ஏரியை திமுகவினர் தூர் வாரி சுத்தப்படுத்தினர்.

இதை அதிமுகவினர் பிரச்சினையாக்கினர். இதையடுத்து, தூர் வாரப்பட்ட  ஏரியை பார்வையிடப் போவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்து, நேற்று முன்தினம் சேலம் நோக்கி பயணமானார்.

கோவை வரை விமானத்தில் சென்ற ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் சேலம் செல்ல முயன்ற போது, கனியூர் சோதனைச்சாவடியில் போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், தற்போது திடீரென கட்சராயன் ஏரியை அதிமுகவினர் மீண்டும் தூர் வார முயன்றனர்.

இதை அறிந்த கிராம மக்கள் அதிமுகவினருக்கு  எதிர்ப்பு தெரிவித்து ஏரியை முற்றுகையிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே  திமுக சீரமைத்த ஏரியை, அதிமுகவினரை விட்டு மண் அள்ள மனுமதி கொடுத்து கடந்த 3 நாட்களாக அதிமுகவினர் மண் அள்ளி வருகின்றனர்.

குறிப்பாக விவசாயிகள் வண்டல் மண்ணை அள்ள வேண்டும் என்ற ஆணை இருக்கும் போது, இப்பகுதியில் வண்டல் மண் இல்லாத நிலையில் முரம்பு மண்ணை அவர்கள் வேண்டுமென்றே 10 அடி, 20 அடி ஆழத்துக்கு வெட்டி எடுத்து ஒரு லோடு மண் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்கின்றனர்.

திமுகவிற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுமென்றே, தூர் வாரப்பட்ட ஏரியை சேதப்படுத்தி விட்டனர். எனவே தான் நாங்கள் இந்த ஏரியை அதிமுகவினர் மீண்டும் தூர்வார கூடாது என்ற வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.