சென்னை: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக, பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தபோது,  தமிழ்நாட்டில்  டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை பிஎப்ஐ நடத்தியது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேறி வந்தது. இதனால், இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டே கேரள மாநில அரசு மத்தியஅரசை வலியுறுத்தியது. அதுபோல, கர்நாடக மாநில அரசும் கடந்த 2020ம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற  வன்முறை சம்பவங்களில் தொடர்புள்ளதன்  காரணமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளை தடை செய்ய  மத்தியஅரசை வலியுறுத்தியது. மேலும் பல மாநிலங்களில் இந்த அமைப்பின் நடவடிக்கை காரணமாக, அதை தடை செய்ய கோரிக்கைகள் எழுந்தன.

இதையடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு மற்றும் அதன் துணைப்புகளுக்கு 5ஆண்டு தடை விதித்து, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 27ந்தேதி உள்துறை அமைச்சகம் அறிவித்தது. 

இதையடுத்து அந்த அமைப்பு பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டது. இந்த நிலையில், இந்திய அரசு அதைத் தடைசெய்த உடனேயே மாநிலத்தில் (தமிழ்நாட்டில்)  டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள உரையில் தெரிவிக்கப்பட்டதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள டிவிட்டல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு தொடர்புகளைக் கொண்ட பயங்கரவாத அமைப்பான PFI-இன் குறிப்பிடத்தக்க இருப்பின் அடையாளமாக, இந்திய அரசு அதைத் தடைசெய்த உடனேயே மாநிலத்தில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் கவனிக்கத்தக்கவை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறிப்பாக தலித் பெண்களுக்கு எதிரானவற்றில் குறைவான தண்டனை பதிவாவதை ஏற்க முடியாது

ஒரு கோயில் என்பது ஆன்மிகத்தலமாகும். அது வெறும் கலை, கலாசார பகுதி அல்ல. ஆன்மிகத்தை எடுத்து விட்டால் அது ஆன்மா இல்லாத உடல் போல வேகமாக சிதைந்து விடும்.

ஆலயங்களின் மோசமான பராமரிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த யுனெஸ்கோ ஆணையத்தின் கருத்துகள் அவசரமாகவும் நேர்மையாகவும் கவனிக்க உகந்தவை.

நமது கலாசாரம் என்பது நமது அடையாளம்.  இசை, நடனம், பாடல்களை உள்ளடக்கிய நமது கலாசாரம் ஆன்மிகத்தில் வேரூன்றியுள்ளது. அனைத்தும் ஆலயங்களைச் சுற்றிலும் வளர்ந்து தழைத்துள்ளன.

இவ்வாறு ஆளுநர் ரவி கூறினார்.

 அவரது உரையில், விடுதலை வேள்வியின்போது,அனைத்துக்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு, தியாக சீலர்களுக்கு ஆதரவாக நின்ற இவர்களின் குடும்பத்தாரையும் உற்றார் உறவினரையும் நன்றியோடு நினைவு கூர்கிறோம். இந்த நாளில், நம்முடைய ராணுவத்திற்குத் தலைவணங்குகிறோம். புதிய இந்தியாவின் உதயத்தையும் எழுச்சியையும் விரும்பாத புற அழுத்தங்களும் உள்ளார்வக் குழுக்களும் உள்ளன. பிரிவினை மற்றும் கற்பனைச் சிக்கல்களை உருவாக்கியும் உயர்த்திப் பிடித்தும் இவை நம்முடைய வளர்ச்சியின் வேகத்தைக் குறைக்க முயல்கின்றன. நம்முடைய சமூக இனம், மதம் மற்றும் வட்டார நல்லிணக்கங்களைச் சிதைப்பதற்கு இவை கங்கணம் கட்டிக்கொண்டாற்போல் உள்ளது.

இவற்றில் சில அமைப்புகள், பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடுகின்றன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கம், இப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். சமூக நல்லிணக்கத்தைச் சேதப்படுத்துவதற்கும் அரசியலமைப்பு நிரலைச் சிதைப்பதற்கும் ஈடுபடுத்திக்கொண்டுள்ள இந்த அபாயகர அமைப்புக்கு வெளியிலிருந்து நிதி கிடைக்கிறது; சர்வதேச பயங்கரவாத அமைப்புகளோடு இதற்குத் தொடர்புகளும் உள்ளன. துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டில் இந்த அமைப்பின் இருப்பு சற்றே வலிமையானதாகும். இந்த அமைப்பிற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்தவுடன், பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தும் துணிச்சல் இதற்கு இருந்தது என்பதை நாம் அறிவோம்.

கோயம்புத்தூரில் நிகழவிருந்த மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதல் தடுக்கப்பட்டுவிட்டாலும் கூட சர்வதேச பயங்கரவாதிகளோடு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. சட்ட அமலாக்க முகமைகள் இப்படிப்பட்ட அமைப்பினை மிகக் கவனமாகக் கண்காணித்து ஓடுக்கவேண்டும் என்பது ஒருபுறமிருக்க. இத்தகையவற்றில் நம்முடைய குடிமக்களும் கவனமாகவும் விழிப்போடும் இருக்கவேண்டும்; பயங்கரவாதச் செயல்பாடுகள் குறித்து தகவல்களை செய்திகளை தெரிந்தால் அல்லது ஐயம் ஏற்பட்டால் சட்ட முகமைகளுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆளுநர் ரவி வெளியிட்டிருந்த குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், இந்திய தேசிய சுதந்திர போராட்டத்தின் போது எல்லா இடர்பாடுகளுக்கும் எதிராகத் தங்களுக்குத் துணையாக நின்ற இந்தப் பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் குடும்பத்தினரை நாம் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

இந்த நாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, மாவீரன் அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம்.

தீரன் சின்னமலை, புலி தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வி.வி.எஸ். அய்யர், சிங்காரவேலர், ருக்மணி லட்சுமிபதி, தில்லையாடி வள்ளியம்மை, குயிலி, சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி, அஞ்சலை அம்மாள் மற்றும் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கிய பலருக்கும் மரியாதை செலுத்துவோம்.

இந்த நாளில், அற்புதமான அறிவாற்றல் மற்றும் அசாதாரண தொலைநோக்குடனும் காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அந்த அரசியலமைப்பு தான் ஒரு வலுவான பன்முக ஜனநாயகமாக இந்தியா வளர உதவியது.

இவ்வாறு ஆளுநர் ரவி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.