சென்னை: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனர் என்று கூறிய லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான்,  வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில்  சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, பீகாரில் இருந்து ஒரு குழுவை தமிழ்நாட்டுக்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அனுப்பினார். அந்த குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள வடஇந்தியா தொழிலாளர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பீகார் மாநில ஊரக வளர்ச்சி திட்ட செயலாளர் பாலமுருகன், பீகார் நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. கண்ணன், தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அலோக்குமார், போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் குமார் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் பீகார் குழுவினர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்துறை மற்றும் தொழில்துறையினருடன் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ தொடர்பாகவும், தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது, வடமாநிலத்தவர்கள், தங்களது எந்தவொரு பிரச்சினையும் இல்லை என கூறியதாக பீகார் மாநில குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை குறித்து கேட்டறிந்தார்.

இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிராக் பஸ்வான் எம்.பி., சமூக வலைத் தளங்களில் பரவும் வதந்திகளை வடமாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தினார்.

இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. பீகார் – தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர். சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.   பிகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் தவறான அணுகுமுறையால் தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்னலுக்கு உள்ளாகின்றனர், என்றவர், பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து ஆதாரங்கள் என்னிடம் உள்ளன, மக்கள் கூறுவதை மட்டுமே நான் நம்புவேன் என கூறினார். மேலும்,  சிராக் பஸ்வான் இன்று மதியம் கவர்னரை சந்தித்து பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக மனு கொடுத்தார்.