ஹாமில்டனில் நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் தோனி இல்லாததால் ரோஹித் சர்மா தலைமை தாங்கினார்.

ind

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி தொடரையும் வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோது 4வது ஒருநாள் போட்டி தொடங்கியது.

இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. உலக கோப்பை நெருங்க உள்ள நிலையில் விராட் கோலிக்கும், காயம் காரணமாக தோனிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்கினார். வழக்கம் போல் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 7 ரன்களிலும், தவான் 13 ரன்களிலும், கேதர் ஜாதவ் ஒரு ரன்னும் எடுத்து அவுட்டாகினர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தேனீர் இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்களையே எடுத்திருந்தது.

அதன்பின்னர் போட்டி தொடங்கியதும் விறுவிறுப்பு காட்டிய இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா பவுண்ட்ரிகளை அடித்த நிலையில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த புவனேஷ்வர் குமார் 1 ரன்னுடனும், குல்தீப் 15 ரன்களிலும், கலீல் அகமது 5 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியாக இந்திய அணி 30.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணி சார்பாக டிரெண்ட் போல்ட் 5விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோல் கிராண்ட் ஹோம் 3விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 93ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். அந்த அணியின் தொடக்க வீரரான குப்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் பந்து வீச்சில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கேப்டன் வில்லியம்ஸ் மற்றும் நிக்கோலஸ் போட்டியை தொடர்ந்தனர். புவனேஷ்வர் பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்ஸ் வெளியேற நிக்கோலஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் களமிறங்கிய டெய்லர் 2 பவுண்ட்ரி மற்றும் 3 சிக்ஸர்களை எடுத்து போட்டியை விரைவில் முடித்து வைத்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் 2விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களை எடுத்தது. இறுதியாக 8விக்கெட் வித்யாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரில் 3-1 என நியூசிலாந்து அணி பின் தங்கியுள்ளது. அந்த அணியின் நிகோலஸ் 30 ரன்களுடன், டெய்லர் 37 ரன்களுடனும் ஆட்டமிழகாமல் களத்தில் இருந்தனர்.

இதற்கு முன்பு நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியா வெற்றிப்பெற்றதால் இந்த போட்டி முக்கியத்துவமானது இல்லை. எனினும் 100 ரன்களுக்குள்ளாகவே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விராட் கோலி மற்றும் தோனி இல்லாத காரணத்தால் போட்டியில் விறுவிறுப்பு இல்லை என்றும் அதனை எளிதில் எதிரணியினர் பயன்படுத்தி கொண்டனர் என்றும் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.