நெகிழ்வூட்டும் உண்மை கதை: சபரிமலை பக்தருடன் 600 கி.மீ பயணித்த நாய்

Must read

சபரிமலைக்கு சென்ற பக்தர் ஒருவருடன் இணைந்து 600 கி.மீ பயணித்த தெருநாய் ஒன்று இன்று அவரது குடும்பத்தில் அங்கமாகியுள்ளது. மனதை நெகிழச் செய்யும் இந்த உண்மைக்கதை தற்பொழுது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


கேரளாவின் கோழிக்கோடு நகரைச் சேர்ந்தவர் நவீன் (வயது 38). இவர் கேரளா மின்சாரத்துறையில் பணியாளராக வேலை செய்கிறார். இவர் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதியன்று சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு 17 நாட்கள் பயணம் மேற்கொண்டார். இவரது இரண்டாவது நாள் பயணத்தில் இவருடன் ஒரு பெண் தெருநாயும் இணைந்து கொண்டது. அதை எவ்வளவோ விரட்டியும் அது போகவில்லை. ஒரு கட்டத்தில் அவரே பரிதாபப்பட்டு சரி அதுவும் வரட்டும் என்று இருந்துவிட்டார்.

அந்த நாயும் அவர் போகுமிடமெல்லாம் அவரைத் தொடர்ந்தது. அவருடன் உண்டு உறங்கியது. அதன் விசுவாசத்தையும் அன்பையும் கண்டு வியந்துபோன நவீன் அதற்கு மாலு என்று பெயரிட்டார். அதிகாலையில் நவீனை எழுப்பிவிடுவது மாலுதான். நாய்க்கும் நவீனுக்குமான நட்பு நவீனுடன் கூட பயணித்த ஐயப்ப பக்தர்களையும் கவர்ந்தது.

இது குறித்து பேசிய நவீன், “மாலு மிகவும் அறிவும் பொறுமையும் உள்ள நாய். இது நான் குளித்துவிட்டு உணவு வங்கிவரும் வரை மிக பொறுமையுடன் காத்திருக்கும். அதுவரை எனது இருமுடிக்கு காவல் அதுதான். சபரிமலையை அடைந்ததும்கூட ஒன்றரைநாள் படியருகே மாலு நான் திரும்பி வரும்வரை காத்திருந்தது. என்னுடன் வந்து எனக்கு பின்னால் வந்த சக பக்தர்கள் கீழேயிருந்து எனக்கு போன் செய்து எனக்கு இந்த தகவலை ஆச்சரியத்துடன் சொன்னார்கள்.
படியிறங்கிய ஒவ்வொருவரது பாதங்களையும் மோப்பம் பிடித்த மாலு சாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வந்த எனது பாதங்களை கண்டவுடன் உற்சாகமடைந்து துள்ளிக்குதித்து என்னுடன் ஒட்டிக்கொண்டது.

அதன்பின்னர் மாலுவை என்னுடன் வீட்டுக்கு கூட்டிவர தீர்மானித்தேன் அதற்காக கேரள போக்குவரத்து கழகத்திடம் விஷயத்தை எடுத்துக்கூறி மாலுவை பஸ்சில் ஏற்ற விசேஷ அனுமதி பெற்றேன். பஸ்ஸில் மாலு சமர்த்தாக அமர்ந்து கொண்டது.
நாங்கள் வீடு வந்து சேர்ந்துவிட்டோம், மாலு இப்போது எங்கள் குடும்பத்தில் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது என்கிறார்”. மாலுவின் பாசமும் நவீனின் பரிவும் சமூகவலைதளங்களில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Credit: The News Minute
Heartwarming story of a dog who walked 600km to keep a Sabarimala pilgrim company

More articles

Latest article