சென்னை:

கட்சியிலேயே இல்லாத மு.க.அழகிரி பற்றி பேச தேவையில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனியார் டிவிக்கு ஒன்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், ‘‘ திமுக சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. புதியவர்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று உறுதியாக சொல்ல முடியாது.

மு.க.அழகிரி கட்சியிலேயே இல்லை. கட்சியில் இல்லாதவரை பற்றி பேச தேவையில்லை. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். கொள்கைகளை அறிவிக்கட்டும் பிறகு பேசுவோம். அரசியல் பார்த்து தான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வந்ததால் ஒதுங்கி இருந்தேன்’’ என்றார்.

ஏற்கனவே கருணாநிதியின் மகன்களான ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்டாலின் மகன், தனது பெரியப்பா அழகிரி குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.