சென்னை:

மக்களுக்காக தான் மருத்துவர்கள்”, அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்துடன் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பணிக்கு திரும்பா விட்டால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 6வது நாளாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரித்தார். ஆனால், அதை எற்க மறுத்த போராட்ட குழுவினர், தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவும் தயார் என கூறினர்.

இந்த நிலையில்,  போராட்டத்தை விடுத்து பணிக்குத் திரும்புவோரை தடுத்ததாக 200க்கும் மேற்பட்ட மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த நிலையில் இன்று  சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி,  அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அங்கீகரிக்கப்பட்ட சங்கத்துடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. அவர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் 5 ஆண்டுகள் கல்வி பயில ஒரு மாணவர் 67,500 ரூபாய் கட்டணம் செலுத்துவதாகவும், ஆனால் ஒரு மாணவருக்கு அரசு 1.24 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதாகவும் சுட்டிக் காட்டியவர்,  பொது சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு செலவு செய்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மக்களுக்காக தான் மருத்துவர்கள்,  பிடிவாதத்துடன் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை அரசு வேடிக்கை பார்க்காது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும்  எச்சரிக்கை விடுத்தார்.