சென்னை:

ரசின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சுமார் 500 மருத்துவர்களை பணியிடம் மாற்றி தமிழக சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தகுதிக்கேற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்க மருத்துவர் பணியிடங்களை நிரப்புதல், பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு, அரசு பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிடக் கலந்தாய்வு நடத்துதல் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த 25 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில்,   இன்று மதியம் 2 மணிக்குள் அரசு மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிடில் அவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப் படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து சிலர் பணிக்கு திரும்பியதாகவும்,அவர்களை பணிக்கு செல்லவிடாமல் சிலர் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், போராட்டத்தை தொடர்ந்து வரும் சுமார் 500 மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி,  சென்னை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  50 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதுபோல மற்ற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் உள்பட  மொத்தம்  500 மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்து சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகஅரசின் இந்த அதிரடி நடவடிக்கை மருத்துவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.