சென்னை: ரஜினி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ‘மக்கள் சேவை கட்சி’யை பதிவு செய்துள்ளது, அவருக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபத்திலோ இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.  தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளருக்கு சொந்தமாக எர்ணாவூர் பகுதியில் உள்ள வீட்டு முகவரியில்தான் ரஜினியின் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2021ம் ஆண்டு மே மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில்  பிசியாக உள்ளார். கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி வெளியிடவுள்ளார். இதற்காக அவர்   டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இந்த நிலையில், ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர்  குறித்த தேர்தல் ஆணையத்தின் கடிதம் வெளியாகி உள்ளது. அதில், ரஜினி தொடங்க உள்ள கட்சியின் பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கோடீசுவரரான ரஜினி, கட்சியின் அலுவலக முகவரியாக, தனக்கு சொந்தமான எந்தவொரு இடத்தையும் தெரிவிக்காமல், தனது மக்கள் மன்றத்தை சேர்ந்தவரின் வீட்டு முகவரியை கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருக்கும் ஏ.ஜே.ஸ்டாலின் என்பவருக்கு சொந்தமான  எர்ணாவூரில் உள்ள வீட்டின் முகவரி கொடுக்கப்பட்டு உள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிக்கு சொந்தாமாக சென்னையிலேயே பல இடங்கள் உள்ள நிலையில், அதில் எந்தவொரு இடத்தையும் கட்சிக்காக ஒதுக்காமல், கட்சி நிர்வாகியின் வீட்டை கட்சி அலுவலகமாக பெயர் பதிவு செய்துள்ளது, ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.