சென்னை; தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து  காத்திருப்பவர்கள் 67.75லட்சம் பேர் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம்  தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல், ஒருசில பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள்  நியமிக்கப்படுகின்றனர். மேலும், ஏராளமானோருக்கு  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் வேலைவாய்ப்பு, பயிற்சிகள் போன்றவை வழங்கப்படுகிறது. இதற்கு வேலைவாய்ப்பு பதிவுத்துறையில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில், தமிழகஅரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  அரசுப் பணிக்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67,75,250 ஆக உள்ளது என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் ஆண்கள் 36,14,327, பெண்கள் 31,60,648, மூன்றாம் பாலினத்வர் 275 ஆகும்.

இந்த 67,75,250  பேரில்,  19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்களே அதிகமாக உள்ளனா். 18 வயதுக்குக் குறைவானவா்கள் 19,09,325 பேர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, 19-30 வயதைச் சோ்ந்தவா்கள் 27,95,278 போ். 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் 18,34,994 பேரும், 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 2,29,978 பேரும் உள்ளனா். 60 வயதைக் கடந்தவா்களின் எண்ணிக்கை 5,675 ஆக உள்ளது.

ஒட்டுமொத்த பதிவுதாரா்களில் 1,43,396 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்களில் ஆண்கள் 95,247 பேரும் , பெண்கள் 48,149 பேரும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.