வாஷிங்டன் :

மெரிக்க அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் 2021 ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க இருக்கும் நிலையில், அவரது வெற்றியை இன்று வரை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்து என்னவெல்லாம் செய்வார் என்று அமெரிக்க மக்கள் பல்வேறு யூகங்களை வெளியிட்டுவருகின்றனர்.

அதில் ஒன்று, அதிபர் டிரம்ப் தன் மீதான வழக்குகளில் இருந்து தனக்கு தானே மன்னிப்பு வழங்கி வழக்குகளிலிருந்து விடுபடுவார் என்ற பேச்சு தற்போது பலமாக உள்ளது.

அமெரிக்க அதிபராக இருப்பவர் தனக்கு தானே மன்னிப்பு வழங்கிக்கொள்ள முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. அவ்வாறு வழங்க முடியும் என்றும் அப்படியெல்லாம் செய்யமுடியாது என்றும் அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் இரு வேறு கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அமெரிக்க அதிபர் மீது போடப்படும் தகுதி நீக்க வழக்கு ஒன்றில் இருந்து மட்டும் தான், அதிபரால் தன்னை தானே விடுவித்துக்கொள்ள முடியாது, மற்ற வழக்குகளில் அவர் தனக்கு மன்னிப்பு அளித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டு என்று சில டிரம்ப் ஆதரவாளர்கள் கூறும் நிலையில், வேறு சிலரோ, அவருக்கு அதிகாரம் உண்டு என்பதை அவரே தனது டீவீட்டில் 2018 ம் ஆண்டு தெரிவித்துள்ளார் என்று அதிரவைக்கின்றனர்.

2016 தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டு சதியில் ஈடுபட்ட டிரம்ப் மீது இருக்கும் பல்வேறு வழக்குகளில் இருந்து அவரால் தப்ப முடியாது, ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றதும் டிரம்ப் மீது வழக்குகள் தொடுக்கப்படும் என்று எதிர் தரப்பினரும் கூறிவருகிறார்கள்.

பிரிவினையால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் டிரம்ப் மீது வழக்கு தொடுத்து மீண்டும் ஒரு பிரிவினையை பைடன் ஏற்படுத்தமாட்டார் என்று நடுநிலையாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கும் அதே வேளையில், 2024 ல் மீண்டும் போட்டியிடப்போவதாக கூறிவரும் டிரம்ப் தனக்கு தானே மன்னிப்பு வழங்கிக் கொண்டால் அது அவர் போட்டியிடும் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கெல்லாம் அசராத டிரம்பின் தீவிர ஆதரவாளர்கள், ஜோ பைடன் பதவியேற்க இருக்கும் ஜனவரி 20 க்கு முன் ஒரு குறுகிய காலகட்டம் தன் பதவியை ராஜினாமா செய்யும் அதிபர் டிரம்ப் அமெரிக்க சட்டவிதிகளின் படி துணை அதிபர் மைக் பென்சை அதிபராக பொறுப்பேற்க வைத்து அவர்மூலம் தனக்கு மன்னிப்பு வழங்க ஏற்பாடுகள் செய்வார் என்று அடித்து கூறுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக வாட்டர் கேட் ஊழலில் இருந்து அதிபர் நிக்சனுக்கு மன்னிப்பு வழங்கிய நடவடிக்கையை மேற்கோள் காட்டுகிறார்கள், ஊழல் காரணமாக பதவி விலக நேர்ந்த நிக்சன் அப்போது துணை அதிபராக இருந்த ஜெரால்டு போர்டை அதிபராக பதவியேற்கவைத்தார், பின் 1974 செப்டம்பர் 8 ம் தேதி அதிபர் ஜெரால்டு போர்ட் முன்னாள் அதிபர் நிக்சனுக்கு மன்னிப்பு வழங்குவதாக பிரகடனப்படுத்தினார்,

இதுபோல் மன்னிப்பு வழங்கி பிரகடன படுத்தப்பட்ட நபர் மீது பழைய காரணங்களை கூறி எந்த ஒரு வழக்கும் தொடரமுடியாத என்பது அமெரிக்க சட்ட விதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அதிபரின் குடும்பத்தினரின் மீது போடப்படும் வழக்குகளில் இருந்து யார் மன்னிப்பு வழங்குவார்கள் என்பது அடுத்த கேள்வியாக தொடர்கிறது.