சென்னை :

ளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, தென் இந்தியாவின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழும நிர்வாகம் மற்றும் அதன் பங்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

109 ஆண்டுகால பழமை மாறாத பாரம்பரியமிக்க இந்த குழுமத்தை அதன் நிறுவனரான, டி.வி.சுந்தரம் ஐயங்காரின் குடும்பத்தை சேர்ந்த 40 க்கும் மேற்பட்டவர்கள் தற்போது நிர்வகித்து வருகிறார்கள்.

டிவிஎஸ் மோட்டார்ஸ், சுந்தரம் கிளேட்டான், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், பிரேக்ஸ் இந்தியா, வீல்ஸ் இந்தியா, சுந்தரம் பிரேக் லைனிங், லூகாஸ் டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 50 நிறுவனங்கள் இந்த குழுமத்தில் உள்ளது.

டி.வி.சுந்தரம் ஐயங்கார்

இந்த நிறுவனங்களை நிர்வகித்து வரும் டிவிஎஸ் குடும்ப உறுப்பினர்கள் 20 வயது முதல் 80 வயது வரை பலதரப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் வளர்ந்தவர்களாக இருந்தாலும், வழி வழி வந்த பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றுபவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான அம்பானி குழுமத்தில் அதன் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த சகோதரர்களுக்கு இடையிலேயே கருத்தொற்றுமை இல்லாத நிலையில், மூன்று தலைமுறையை கடந்து டிவிஎஸ் நிறுவனம் நிதானத்துடன் கூடிய வெற்றியை ஈட்டிவருவது, அவர்களின் குடும்பம் மட்டுமல்ல அவர்களின் நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் உணர்த்துவதாக உள்ளது.

கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால் பல இந்திய நிறுவனங்கள் காணாமல் போன போது கூட, காலத்திற்கேற்ப பழையவர்கள் ஒதுங்கிக்கொண்டு புதியவர்களுக்கு வழிவிட்டு தற்போது நான்காம் தலைமுறைக்கு எடுத்து சென்றிருக்கிறார்கள், டிவிஎஸ் குழுமத்தை.

தற்போது இதன் நிர்வாகத்தை கையிலெடுத்திருக்கும் பலரும் இளம் தலைமுறையை சேர்ந்தவர்களாக உள்ளதால், இவர்கள் தங்களின் முந்தைய தலைமுறை போன்று புதிய முயற்சிகளை எடுக்க தயக்கம் காட்டமாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேவேளையில், இவர்கள் தங்கள் நிறுவனத்தின் பழமை மாறாது அதன் மதிப்பை கட்டிக்காக்கும் வகையில் இவர்களின் உறவுகள் இவர்களை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பம், பார்மாசியூட்டிகள், மரபு சாரா எரிசக்தி என்று பல துறைகளில் இந்த நிறுவனம் கால் பதித்திருந்தாலும், புதிய முயற்சிகளை எடுக்க தயக்கம் காட்டியதால் கால தாமதமாகவே இந்த புதிய துறைகளில் காலடி வைத்தது. இந்த தயக்கமும், அச்ச உணர்வும் இளையவர்களின் புதிய முயற்சிக்கு தடைகல்லாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக நிர்வாகத்தில் இந்த மாற்றங்களை செய்துள்ளது.

குடும்ப உறவுகளையும் தொழிலையும் தனித்தனியே பிரித்துப்பார்க்கும் பக்குவம் மிகுந்த இந்த குழுமம், இனி டிவிஎஸ் என்ற பெயரை தங்கள் குழும நிறுவனங்கள் அனைத்தும் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது.

இந்த குழுமத்தின் பல நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியிலும், மேலும் இதன் பிற பங்குதாரர்களின் நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளதால், இந்த நிர்வாக சீர்திருத்தங்கள் நினைத்த பலனை தருமா என்பது வரவிருக்கும் நாட்களில் தெரியவரும்.

– நன்றி : தி ஹிந்து பிசினஸ் லைன்