பெங்களூரு

திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளிகளுக்கு மிரட்டல் விடுப்பது போல கர்நாடக பாஜக அமைச்சர் சி டி ரவி பேசி உள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடெங்கும் அதிகரித்து வருகிறது.  பல இடங்களில் கடும் வன்முறை வெடித்துள்ளது.  டில்லி, பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.   ஆயினும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த போராட்டத்தின் போது  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம் அடைந்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது.  இது கர்நாடக மாநிலத்தில் போராட்டங்களை மேலும் அதிகமாக்கி உள்ளது.    மாநிலம் கடும் பதட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக அமைச்சர் சி டி ரவி, ”பெரும்பான்மையினர் பொறுமையை இழந்தால் என்ன ஆகும் தெரியுமா?   கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு ஏற்பட்ட விளைவுகளை நீங்கள் மறந்து விட்டீர்கள்.  அதைச் சற்று திரும்பிப் பாருங்கள்.  பெரும்பான்மையினருக்கு அதைத் திரும்பச் செய்யத் தெரியும்.  எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்” எனக் கூறி உள்ளார்.

ஒரு அமைச்சர் இவ்வாறு வன்முறையைத் தூண்டும் வண்ணம் பேசுவது கர்நாடக மக்களுக்கு கடும் அதிருப்தியை அளித்துள்ளது.