ராஞ்சி:

பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மூலம் மக்களுக்கு ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் சிவில் சப்ளை துறை உணவு பொருட்களை கிராமங்களில் உள்ள டீலர்களுக்கு வழங்கும். டீலர் கமிஷன் தொகையான ரூ.1 ஐ மக்கள் செலுத்தி உணவு பொருட்களை வாங்கி கொள்கின்றனர்.

தற்போது இதில் நேரடி மானிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதாவது ஒரு கிலோ உணவு பொருளுக்கு ரூ.32.60 ஐ மத்திய அரசு பயனாளியின் வங்கி கணக்கல் செலுத்தும்.

இந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்து டீலரிடம் ஒரு கிலோவுக்கு ரூ.31.60 என்ற கணக்கில் பணம் கொடுத்து பொருளை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த திட்டம் வெள்ளோட்டமாக ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் நாகிரி வட்டாரத்தில் டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளது.

இவ்வாறு வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்து பொருளை வாங்குவதால் வங்கிகளுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்பட்டுள்ளது. அதோடு டீலர்களும் அதிக அளவு பணத்தை கையாள வேண்டியுள்ளது. மாதத்துக்கு ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் வரையிலான பணத்தை அவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் டீலர் அந்த பணத்தை மீண்டும் வங்கியில் செலுத்த வேண்டும்.

மேலும், பயனாளிகள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்துள்ளனர். இதில் எந்த வங்கி கணக்கில் ரேசன் மானியத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆதார் அடிப்படையில் தான் ரேசன் மானியம் வழங்கப்படுகிறது. அனைத்து வங்கி கணக்குகளுடனும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் எந்த கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மக்கள் அலைவதை காண முடிகிறது. மக்களுக்கு நேரம் வீணாவதோடு, சிறிய அளவில் செயல்படும் கிராமப் புற வங்கிகளுக்கும் பணிச் சுமை அதிகரித்துள்ளது.

வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டால் மொபைலுக்கு வரும் குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ளும் வசதி சிலரிடம் மட்டுமே உள்ளது. இந்த வசதி இல்லாதவர்கள் வங்கியை நாடி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சில வங்கிகளில் மக்களை பணம் எடுக்க வங்கிகள் அனுமதிப்பது கிடையாது. பணம் எடுப்பதற்கு ஏற்ப நிதியாதாரம் கணக்கில் இல்லை என்று வங்கிகள் கூறுகின்றன.

வங்கிகளின் இத்தகைய செயல்பாடு மக்களுக்கு அசவுகர்யம் ஏற்படுத்துவதோடு, வங்கி நடைமுறைகளுக்கு எதிரான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றன. நாகிரி வட்டார பகுதி முழுவதும் 4 முதல் 5 வங்கிகள் மட்டுமே உள்ளன. இதனால் வங்கிகளில் எந்த நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. அதிகமானோர் பணம் எடுப்பதால் அதிக நேரம் பிடிக்கிறது. பெரும்பாலான வங்கிகளில் பாஸ்புக் என்ட்ரி போடும் வசதி இல்லை. இதனால் வெளிப்படையான நடைமுறை இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் மூத்த குடிமக்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகம் அவதிப்படுகின்றனர். இவர்கள் பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்ய வங்கிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளி செல்வது பாதிக்கிறது. முதியவர்கள் அதிகசிரமப்பட்டு வங்கிக்கு செல்கின்றனர். இதில் இறந்தவர்களின் கணக்குகள் மற்றும் திருமணம் முடிந்து சென்று பெண்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட தொகையை எடுப்பதில் மேலும் குழப்பம் நிலவுகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மிக பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு உணவு பாதுகாப்பு அளி க்கப்பட வேண்டும். இதற்கு மாறாக நேரடி மானிய திட்டம் மிக பாதிக்கப்பட்ட மக்களை தண்டித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நபர் அல்லது இரு நபர் உள்ள குடும்பங்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ. 5 வழங்கப்ப டுகிறது. இதை எடுக்க அவர்கள் வங்கிக்கும், ரேசன் கடைக்கும் மாறி மாறி அலைய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் நாகிரி மக்கள் தங்களுக்கு நேரடி மானிய திட்டம் வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நான்கு கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒருவர் கூட இந்த திட்டம் வேண்டும் என்று கூறவில்லை.