டெல்லி: சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் உலகளாவிய நிறுவனங்களுக்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை மாற்ற முயலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாரதிய மஸ்தூர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள்  இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதற்கேற்ப ஆளும் பாஜகவும், பல மாநில அரசுகளும் தொழிலாளர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை மாற்றுவதில் ஆர்வமாக இருக்கின்றன.
அதற்கு வசதியாக தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதில் தொழிலாளர் அமைச்சகம் களம் இறங்கி உள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு தொழிலாளர்கள் நல அமைப்புகள் கடும் எதிர்ப்பு வருகின்றன. அதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிற்சங்க பிரிவான, பாரதிய மஸ்தூர் சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
இது குறித்து அதன் தேசியத் தலைவர் சஜி நாராயணன் கூறி இருப்பதாவது: வேலை நேரத்தை நீட்டிப்பது உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கு அரசாங்கம் மாநிலங்களை அனுமதித்தால், அது கொரோனா வைரஸ் தொற்றுநோயை விட மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
எனவே இதுபோன்ற நடவடிக்கையிலிருந்து விலகுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதுமாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் கேட்டுள்ளோம். தொழிலாளர்கள் திரும்பி வர வேண்டும் என்று மாநிலங்கள் விரும்பினால், தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட் மற்றும் மின்னணு பாஸ் போன்ற சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வேலை செய்யுமாறு நீங்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது.
அனைத்து ஊழியர்களின் ஐந்து நாள் சம்பளம் ஆறு மாதங்களுக்கு கழிக்கப்படும் என்று அறிவித்த முதல் மாநிலம் கேரளா. இப்போது, ​​14 மாநிலங்கள் கட்டாய ஊதியக் குறைப்புகளை அறிவித்துள்ளன. இந்த நடவடிக்கையை மாநில அரசுகள் அகற்ற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,
இந்தியா ஒருபோதும் சீனாவாக இருக்க முடியாது, ஏனென்றால் இது ஒரு ஜனநாயக நாடு, எங்களுக்கு தொழிற்சங்கங்கள் உள்ளன, சீனாவை போலன்றி எங்களுக்கு தொழிலாளர்கள் உள்ளனர். சில நிறுவனங்கள் ஏற்கனவே வியட்நாமிற்கு சென்றுவிட்டன என்றார்.
நாராயணன் மற்றும் 12 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் கங்வாருடன் இதுதொடர்பாக சந்தித்து பேசி உள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களில் மீண்டும் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடாது என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இனி ரயில்கள் இயங்காது என்று அறிவித்த அடுத்தநாள் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.