டெல்லி: உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என யுஜிசி -ஏஐசிடிஇ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய மாணவர்களிடையே வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் படித்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட போர் காரணமாக, அவர்களின் எதிர்காலப் படிப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில்  பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது என பல்கலைக்கழக மானிய குழுவும், அகில இந்திய தொழில்நுட்ப குழுவும் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக UGC & AICTE வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், உயர் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால், பாக்கிஸ்தானின் எந்தவொரு பட்டப்படிப்பு கல்லூரி/கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற விரும்பும் எந்தவொரு இந்தியரும் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகனும், பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்) இந்தியாவில் வேலை வாய்ப்பு பெறவோ அல்லது உயர்கல்வி படிப்பை தொடரவோ தகுதி பெற மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்தியாவினால் குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குழந்தைகள், பாகிஸ்தானில் உயர்கல்வி பட்டம் பெற்ற பின்னர்,  உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியைப் பெற்ற பிறகு, இந்தியாவில் வேலை தேடத் தகுதியுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.