டெல்லி: இந்தியா பிரிட்டன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதியளித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்  நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகள் இடையே பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, சில ஒப்பந்தங்க ள் கையெழுத்தானது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய போரிஸ்,  பொருளாதார குற்றவாளிகளான  இந்த இருவரையும் இந்தியா கொண்டு வருவதில் சட்ட ரீதியான சவால்கள் நிலவுகிறது. அதேவேளை, பிரிட்டன் அரசு இந்த இருவரையும் இந்தியா திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி, அங்கு உரிய வழக்கு விசாரணை நடத்தவே பிரிட்டன் விரும்புகிறது. எங்கள் நாட்டில் திறமை மிக்க சிறந்த நபர்களையே வரவேற்க விரும்புகிறோம். மாறாக எங்கள் சட்டத்தை வைத்து தங்கள் குற்றத்திலிருந்து தப்ப நினைப்பவர்களை நாங்கள் ஒருபோதும் வரவேற்க மாட்டோம்” என்று கூறினார்.

பின்னர்,  இந்த விவகாரம் தொடர்பாக பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் சிருங்லா, “பொருளாதார குற்றவாளிகள் இந்தியா அழைத்து வரப்பட்டு அவர்கள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதே இந்திய அரசின் நோக்கம். இது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேசப்பட்டது பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்த விவகாரத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும். பிரிட்டன் அரசு சார்பில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோம் என உறுதியளித்துள்ளார்” என அவர் கூறினார்.