சென்னை: மருத்துவரின் பரிந்துரை சீட்டு (prescription)  இல்லாமல், மருந்து விற்பனை செய்யக்கூடாது மருந்து விற்பனை கடைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் மருந்து விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தொடர்ந்து அறி வுறுத்தி வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசும் அறிவுறுத்தி இருந்தது. அதில்,  மருந்துக் கடைகளில் சட்டவிரோதமாக விற்கப்படும் மருந்து  மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால், பலர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், கர்ப்பிணிகள் உயிரிழக்கும் பரிதாபமும் அவ்வப் போது நடக்கிறது. இதை மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் கண்காணித்து, சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனால் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என அறிவித்தது. இருந்தாலும், மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்யப்படும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,   தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் தொடர்ச்சியாக மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த சோதனைகளின்போது சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

எனவே, அந்த மருந்து கடைக்கு கொட்டிவாக்கம் சரக மருந்துகள் ஆய்வாளரால் பெருங்குடி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் தொடங்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அந்த மருந்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மன நோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.