“வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம். ஆனால், அந்த வெற்றியை நமக்கு எளிதாக கிடைக்க விடமாட்டார்கள்” என்று தன் கட்சியினரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தது ஒரு பரபரப்பான செய்தி.

ரஜினியை முன்னிறுத்தி பாஜக ஆடிவந்த ஆட்டம் அப்படியானது.

ஆனால், ரஜினியின் இன்றைய அறிவிப்பின் மூலம், அனைத்தும் அப்படியே அடிமாறிப் போயுள்ளது. கூட்டணி கட்சிகள் பேர வலிமையை அதிகரிக்கும், ஒரு தொகுதிக்கு குறைந்தது இவ்வளவு வாக்குகள் பிரியும் என்ற ரிப்போர்ட், விபரம் புரியாத புதிய வாக்காளர்கள் பெரியளவில் மடை மாறிச் செல்வது, மாற்று வாக்குகள் சிதறுவது, ஊடக கவனம் பெரியளவில் திசை மாறுவது உள்ளிட்ட பல கவலைகள் அக்கட்சிக்கு இருந்தன.

இவற்றையெல்லாம் மனதில் வைத்தே, திமுக – அதிமுக என்ற இரு கட்சிகளும், ஒருவரையொருவர் பரஸ்பரம் உக்கிரமாக தாக்கிக் கொள்ளத் தொடங்கின. ரஜினி மீதான கவனத்தை திருப்புவது அவர்களின் எண்ணம்.

ஆனால், தற்போது ரஜினி பற்றிய கவலையை, அவரின் மூலமாக பாரதீய ஜனதா செய்ய திட்டமிட்ட தில்லாலங்கடி வேலைகள் பற்றிய எண்ணத்தை மறந்துவிட்டு, வேறு வேலைகளில் இரு கட்சிகளும் முழு கவனத்தை செலுத்தலாம்.

அதிலும், வெற்றி உறுதி என்ற நிலையிலிருக்கும் திமுக, தனது பாய்ச்சலை ரிலாக்சாக மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.