சென்னை:
டப்பாடி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் இன்று அதிகாலை அவரது வீட்டில் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டையில் திமுக இளைஞரணி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி, “தலித் மக்கள் கூட இன்று நீதிபதியாக முடியும் என்பது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை” என்றார். மேலும் பத்திரிக்கையாளர்களையும் அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்.

அப்போதே இந்தப் பேச்சு பெரும் விமர்சனங்களைக் கிளப்பியது. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று திடீரென அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்குச் சென்ற மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப் பிரிவு போலீஸார், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். நீதிபதியின் வீட்டில் திமுகவின் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதியை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடிவருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் கைதை கண்டித்து திமுகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.பாரதியை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் தான் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி  கூறியது:

பிப்ரவரி 15 ஆம் தேதி அன்பகத்தில் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியதாக செய்திகள் வெளியிடப்பட்டு அதற்கு அடுத்த நாளே அதற்கு மன்னிப்பு விளக்கமும் மறுப்பும் வருத்தமும் தெரிவித்துவிட்டேன்.

இது நடைபெற்று இது நடந்து ஏறத்தாழ 100 நாட்கள் ஆகிவிட்டது. அதாவது ஒரு கொரோனா வருவதற்கு முன்பாக பேசினேன். ஆனால் கொரோனா இன்றைக்கு சென்னையில் உச்சகட்டத்தில் உள்ளது. 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர், இந்த நிலையில் என்னை கைது செய்து சிறையில் வைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.

எனக்கு 71 வயதாகிறது நான் டயாப்படிஸ் பேஷண்ட், ஹைபர்தென்ஷன் பேஷண்ட் இதை நான் எழுத்து பூர்வமாக வந்திருந்த காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்து உள்ளேன். அதுதான் நீதிமன்றத்திலும் சொல்ல உள்ளேன்.

சிறைச்சாலைக்கு நான் பயந்தவன் அல்ல.நான் மிசா காலத்தில் ஜெயிலில் இருந்தவன், கலைஞருடன் பலமுறை ஜெயிலில் இருந்தவன்.ஜெயில் என்பது புதிதல்ல. ஆனால் இன்று தமிழகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்ற போது..

நேற்று மாலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் மீதும் நான் ஒரு புகார் மனுவை விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட் இடம் கொடுத்தேன். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு என்னை கைது செய்கிறார்கள்.  உங்கள் மூலமாக எடப்பாடிக்கு தெரிவித்துக் கொள்வது,இந்த குறைந்த நேரத்தில் கோயம்புத்தூர் நகராட்சியில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது, 27 ரூபாய்க்கு வாங்கவேண்டிய வேப்ப எண்ணையை பல மடங்கு உயர்வு கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் வைத்துள்ளேன் இப்படிப்பட்ட ஊழல் புகார்களை கொடுக்கின்ற காரணத்தினால், என்னை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி மற்றும் வேலுமணி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார்கள். இப்போது அதுமட்டுமல்ல இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குப் போட்டு அந்த வழக்கு அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதின் பேரில் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தகட்டத்தில் இப்போது என்னை கைது செய்ய வருகிறார்கள்.

இன்னொரு மனு இந்த எப்.ஐ.ஆரை ஸ்குவாஷ் செய்ய போடப்பட்டு உள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது, இப்படி இரண்டு நிலையில் இருக்கும் போது, அவசரவசரமாக கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக எங்களை போன்றோரை கைது செய்ய துடிக்கிறார்கள் அதைபற்றி கவலை யில்லை, என் தலைவர் கலைஞர் 77 வது வயதில் கைது செய்யப்பட்ட நிலையில் நான் 71 வயதில் கைது செய்யப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.