சென்னை:
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தங்கள் பகுதிகளில் உள்ள மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை சேகரியுங்கள் என்று திமுகவினருக்கு, தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்துக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆழ்துளை கிணற்றில் விழுந்து மரணத்தை தழுவிய குழந்தை சிறுவன் சுர்ஜித்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறுவனின் வீட்டிற்கு சென்ற அவர், அவனது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மீட்புப் பணியில் அரசு மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கூறியவர், பாறை மற்றும் மண்ணின் தன்மை குறித்து குடிநீர் வடிகால் வாரியம் முன்பே அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த சிறுவன் 36 அடியில் இருக்கும் போதே காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பேட்டி தருவதில் காட்டிய ஆர்வத்தை மீட்பு பணியில் காட்டவில்லையோ என்கிற ஏக்கம் அனைவருக்கும் இருப்பதாகவும், சம்பவம் நடந்த உடனேயே மத்திய பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தினரை அழைத்திருக்க வேண்டும், அரசை குறை கூற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை கூறவில்லை என்றவர், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்திடக் கூடாது என்ற நோக்கத்தில் இதனை கூறுகிறேன் என்றும், அரசு அதிகாரிகளிடம் முறையான திட்டம் இல்லாததால் சுஜித்தை மாநில அரசு மீட்கவில்லை என்றார்.
அதைத்தொடர்ந்து பேசியவர், திமுகவினர், மாநிலம் முழுவதும் உங்களது பகுதிகளில் உள்ள திறந்த வெளி போர்வெல்கள் பற்றிய விவரங்களைப் பெற்று மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து, அவற்றை மூட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.