சென்னை:

யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா? ”அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர்பலி வேண்டுமா?” என்று தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் ‘சுளீர்’ என கேள்வி விடுத்துள்ளது.

குழந்தை சுஜித் பலியான விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,   ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும்போது அவர்களை காப்பாற்ற 6 விதமான தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உள்ளன.

இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்த சில மணி நேரத்திலேயே உயிருடன் குழந்தையை மீட்டு விடலாம். ஆனால் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி சம்பவத்தில் இந்த தொழில் நுட்பத்தில் ஒன்றை கூட பயன்படுத்தவில்லை.

காலதாமதம் ஏற்பட்டதால் ஒரு சிறுவனின் உயிர் பறிபோய் விட்டது. கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2010-ம் ஆண்டே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி ஆழ்துளை கிணறுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தமிழக அரசு 2015-ம் ஆண்டு கொண்டு வந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும், தமிழக அரசின் சட்டத்தையும் அரசு அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

எனவே, இது சம்பந்தமாக தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

இந்த  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சே‌ஷசாய் ஆகியோர் விசாரித்தனர். அப்போது,  தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா?

அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றபடுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்று குற்றம் சாட்டிய நீதிபதிகள்,  மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும்,  மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், சுர்ஜித் விவகாரத்தை  தொடர் நேரலை செய்ததை தவிர எந்த ஊடகங்களும் சமூக பொறுப்புடன் செயல்படவில்லை என்ற கூனிர்.

ஒவ்வொரு தனி மனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள்,  சுபஸ்ரீ மரணம் அடைந்ததும் பேனர் சட்டத்தையும், சுஜித் மரணம் அடைந்ததும் ஆழ்துளை கிணறு சட்டத்தையும் சிறிது காலம் அமல்படுத்திவிட்டு அதன்பின்பு கைவிட்டு விடுகின்றனர். சட்டத்தை முறைப்படி அமல்படுத்தினால் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாது. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு அரசு தரப்பு வக்கீலிடம் தெரிவித்தனர்.