சென்னை:

ழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு தமிழகஅரசு ரூ.5 லட்சம் பரிசு வழங்கும் என்றும், பயனற்ற மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்றும், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்து உள்ளார்.

திருச்சி அறந்தாங்கி அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில்  தவறி விழுந்த 2வயது குழந்தை சுஜித் உயிருடன் மீட்கப்பட முடியாத நிலையில், குழந்தை உயிரிழந்தது  மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மிடையே குழந்தையை மீட்கும் சிறந்த கருவிகளும், தொழில்நுட்பம் இல்லாததே, குழந்தை சுர்ஜித் உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை உயிருடன் மீட்கும் வகையில் புதிய கருவி கண்டு பிடிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுபோல பல மாவட்டங்களில் உள்ள தனியார் சேவை நிறுவனங்களும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆதாரத்துடன் தகவல் அளித்தால் ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று நாமக்கல் தலைமலை சேவா டிரஸ்ட் அறிவித்துள்ளது.

மேலும் பல்வேறு இடங்களில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடி வருகின்றனர்.

மேலும் வடகாடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டு பயன்பாடின்றி மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து விவசாயிகள் மற்றும் பொதும க்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாசன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், அவர்களுடன் இணைந்து திறந்தநிலை ஆழ்துளை கிணறுகளை மூடவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் சார்பில் அமைக்கப்பட்டு மூடப்படாமல் ஏராளமான ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு அவற்றை மூட வலியுறுத்தப்பட்டு வருகிறது.