மதுராந்தகம்: வெளியே அரிசி ஆலை என பெயரிட்டுவி,. உள்ளே சென்றால் போலி மதுபான ஆலை நடத்தி வந்த திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவரும், திமுக தொண்டரணி செயலாளருமான வடிவேலு என்பவர் கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலம் முழுவதும் தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து மக்களை குடிகாரர்களாக்கி வரும் நிலையில், ஆங்காங்கே கிராமப்புறங்களில், அரசியல் கட்சியினர் திருட்டுத்தனமாக மதுபானங்களை தயாரித்தும், புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் வாங்கி அதிக விலைக்கும் விற்று வருகின்றனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி மதுபானங்கள் நடமாட்டம் உள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரகசியமாக விசாரித்து வந்த காவல்துறையினர், அந்த பகுதியில் செயல்படும் ஒரு அரிசி மீது சந்தேகமடைந்தனர். இதையடுத்து, காவல்துறையினர் அங்கு திடீரென ரெய்டு நடத்தினர். அஇப்போது, அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையில், போலி மதுபான ஆலையை நடத்தியவர், மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே உள்ள வட மணிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு என்பவது தெரிய வந்தது. இவரது மனைவி ஜெயந்தி. இவர் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார்.
இவர், ஒரத்தி-திண்டிவனம் சாலையில் உள்ள ஒரு அரிசி ஆலையை ஒப்பந்தத்துக்கு எடுத்துவிட்டு, அங்கு அரிசி வியாபாரம் செய்வதற்கு பதிலாக, அரிசி ஆலையில் போலி மதுபானங்கள் தயாரித்து வந்தது தெரிய வந்தது. அங்கிருந்து, விற்பனைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வடிவேலுவையும் கைது செய்தனர்.
மேலும் மதுபானம் தயாரிக்க 212 கேன்களில் வைத்திருந்த எரி சாராயம், 11 ஆயிரம் பாட்டில் மூடிகள், 20 ஆயிரம் காலிபாட்டில்கள், மதுபாட்டில்களை சீல் வைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டது.
போலி மதுபான ஆலையில் தயாரிக்கப்பட்ட மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளிலும் கள்ளத்தனமாக கொடுத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
வடிவேலு, அவருக்கு உடந்தையாக இருந்த முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். எரி சாராய வழக்கில் கைதான வடிவேலு மீது ஏற்கனவே நாட்டுவெடிகுண்டு தயாரிப்பு, ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தலின் போது தடுத்த போலீசார் மீது டிராக்டர் மோதி கொலை செய்ய முயன்றது, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் திமுகவில் ஒன்றிய தொண்டர் அணி செயலாளராக அச்சரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெளியே அரிசி ஆலைபோல் தோற்றமளித்தாலும், உள்ளே மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.